'அமித்ஷா கதையை முடித்து இருப்பார்,, தவெக MP-யே இல்லாத கட்சி' - மாணிக்கம் தாகூர் கருத்தால் சர்ச்சை !
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. எனினும் அந்த கட்சிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெக ஆட்சியமைக்க முதல் ஆளாக சென்று ஆதரவு கொடுத்தது.
தொடர்ந்து பிற கட்சிகளின் ஆதரவை பெற்று தவெக ஆட்சியமைத்த நிலையில், விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சரவையில் இரு இடங்கள் வழங்கப்பட்டது. இந்த சூழலில், தற்போது விஜயை அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் நிலையில், அது குறித்து காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள தவெக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அதோடு, கடந்த இரு நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என திமுக முதல் கட்சியாக அறிவித்தது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து, தவெகவோடு இணைந்தும், தவெக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை.
இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் தொடர்பாக அக்கட்சியினர் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேலும் தவெக எம்.பியே இல்லாத கட்சி என்றும், எப்போ தவெகவுக்கு எம்.பி வருகிறதோ அப்போ அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார். அதோடு தவெக ஆட்சியமைக்க முதலில் ஆதரவு தெரிவித்த கட்சி காங்கிரஸ் என்றும், நாங்கள் இல்லையென்றால் இல்லையென்றால் அமித்ஷா கதையை முடித்து, கட்சியை உடைத்து பழனிசாமியை முதல்வராக்கி இருப்பார் என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

