நெருங்கும் தேதி.. மதுரை மாநாட்டுத் திடலில் போலீஸ் அதிகாரிகள்.. காவல்துறை அனுமதி எப்போது?
தவெகவின் மதுரை மாநாட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், காவல்துறை தரப்பில் இருந்து இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஒரு பக்கம் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திடலுக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த். மதுரைக்கு விஜய்யின் வருகையை அவரது தொண்டர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அங்கு என்ன நடக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பாரபத்தி பகுதியில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே அவகாசம் இருக்கும் நிலையில், பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
250 அடி நீளம், 60 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக மேடை, விஜய் நடந்து செல்ல சுமார் 800 மீட்டர் நீளத்திற்கு ரேம்ப் வாக் மேடை, குடிநீர் குழாய், எல்.இ.டி திரை அமைக்கும் பணிகள் என்று பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
தேதி நெருங்கி வரும் சூழலில், காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவெக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இப்படியான நிலையில்தான், மாநாட்டு திடல், கார் பார்க்கிங் இடம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், ஏடிஎஸ்பிக்கள் அன்சுல் நாகூர், திருமலைக்குமார் மற்றும் கால்துறை அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். பார்க்கிங் மற்றும் திடலின் பரப்பளவு குறித்து, தவெக நிர்வாகிகள் காவல்துறை அதிகார்களிடம் எடுத்துக் கூறினர்.
ஏற்கனவே 25ம் தேதிக்கு திட்டமிட்ட மாநாடு, 21ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அனுமதி தொடர்பாக விசாரிக்கையில், விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.