நாங்குநேரி சம்பவம்| ’முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?..’ விஜய் கண்டனம்!
நாங்குநேரி பகுதியில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி, பொதுமக்களை அரிவாளால் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலனி பகுதிக்கு நேற்று திங்கள் கிழமை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்கில் வந்துள்ளது. அவர்கள் அங்குள்ள டீ கடை ஒன்றின் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசினர். குண்டு வெடித்து சிதறியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அந்த கும்பல் பொதுமக்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டியதில் இரண்டு பேர் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 7 பேர் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சம்பத்தில் ஈடுபட்ட கும்பலை தேடி காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
இந்தசூழலில் நாங்குநேரி கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், “திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி” என பதிவிட்டுள்ளார்.

