நாங்குநேரி| பெட்ரோல் குண்டுவீசி பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கும்பல்.. 2 பேர் உயிரிழப்பு!
நாங்குநேரி பகுதியில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி, பொதுமக்களை அரிவாளால் வெட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலனி பகுதிக்கு நேற்று திங்கள் கிழமை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்கில் வந்துள்ளது. அவர்கள் அங்குள்ள டீ கடை ஒன்றின் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசினர். குண்டு வெடித்து சிதறியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அந்த கும்பல் பொதுமக்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டியதில் பெரும்பத்து இந்திரா காலனியைச் சேர்ந்த ஜான் மார்க் (50) மற்றும் வட மாநில செங்கல் சூளை தொழிலாளி ட்ரீனத் காட்டா ஆகிய இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன், பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு இடத்திலும் பொதுமக்களை வெட்டிய அதே கும்பல்..
இதற்கிடையே அதே கும்பல் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை வெட்டியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
மர்ம கும்பலின் இந்த அட்டூழியத்தை கண்டித்து பெரும்பத்து பகுதியில் பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மர்ம கும்பலின் கண்மூடித்தனமான தாக்குதலில் 2 பேர் பலியான நிலையில் 7 பேர் காயம் அடைந்த சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
6 பேர் கைது..
தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் வலைவீசி தேடிவந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடையதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து இறந்த ஜானின் உடலை வாங்க போவதில்லை எனவும் அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏர்வாடியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலை நேற்று இரவில் இருந்து தற்போது வரை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

