“கூத்தாடிகளை தூக்கிவைத்து கொண்டாடுகிற நிலை உடைபட வேண்டும்”- த.வா.க. வேல்முருகன்

சென்னை அடையாறில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன், “கூத்தாடிகளை தூக்கி வைத்து கொண்டாடுகிற இந்த நிலை உடைபட வேண்டும்” என நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
TVK வேல் முருகன்
TVK வேல் முருகன்முகநூல்

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விஜய்யை கடுமையாக சாடியிருந்தார். அப்படி அவர் ஏற்கெனவே “விஜய்யின் கட்சியை எப்படி, TVK என அழைக்கலாம்? ஏற்கனவே எனது கட்சி TVK (தமிழக வாழ்வுரிமை கட்சி) என இருக்க இது எப்படி சரியாகும்?” என தேர்தல் ஆணையத்திடமேவும் கேட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைப்பெற்றது.

இதில் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன், நடிகரும் இயக்குநருமான தங்கர்பச்சன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எழுத்தாளர் பவா செல்லதுறை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து பேசிய வேல்முருகன், “சமீபத்தில் ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அப்படி அவர் உறுப்பினர்களை சேர்த்து வரும்போது திடீரென இணையதளமே முடங்கிவிட்டது என்று கூறுகிறார்கள்.

பத்திரிகைகள் எல்லாம் இது குறித்து கூறும்போது, ‘அவர் செயலி தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே 2லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்’ என்கிறார்கள். அடுத்த நாள் காலையில், ஒரு பெரிய ஊடகமும், இதுகுறித்து தெரிவிக்கையில், 50 லட்சம் பேர் இதில் சேர்ந்து விட்டார்கள் என செய்தி வெளியிட்டு இருக்கிறது.

TVK வேல் முருகன்
வெறும் 3 நாட்களிலேயே இத்தனை லட்சம் உறுப்பினர்களா?! த.வெ.க நிர்வாகி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அண்ணன் திருமாவளவன், தியாகு, மணியரசன் ஆகியோர் எல்லாம், 40 ஆண்டுகளாக இந்த தமிழ்ச் சமூகத்திற்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டுவிட்டு ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு, அதில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு டீ, பிஸ்கட், ரொட்டி கிடைத்தால் உண்பது, இல்லாவிட்டால் பட்டினி கிடந்து இந்த மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உழைப்பது என்று வாழ்ந்து வருகின்றனர். அப்படியான எண்ணற்ற தியாகிகளை இந்த இளைஞர் சமுதாயம் தூக்கி எறிந்துவிட்டது.

இப்படி கூத்தாடிகளை தூக்கி வைத்து கொண்டாடுகிற இந்த நிலை உடைபட வேண்டும், உடைக்கப்பட வேண்டும். இப்போதுகூட நான் பேசிவிட்டு வெளியே போனால் விஜய் ரசிகர்கள் 100 பேர் என்னை கல்லால் அடிக்கக்கூடும். அப்படி அடித்தால்கூட கேட்க ஆள் இல்லை. அவர்களுக்கு (விஜய் ரசிகர்களுக்கு) யார் தியாகு, யார் பவா, அவர்களுடைய சிந்தனை என்ன, எழுத்து என்ன, சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன உள்ளிட்ட எதை குறித்தும் கவலை இல்லை.

‘உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு’ என்று கூறினார்கள். அப்படிப்பட்ட ரஜினியின் பாபா பட பெட்டிகள் எல்லாம் என் முந்திரி காட்டில்தான் இருந்தன. அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரையும் எதிர்த்துதான் 43 ஆண்டுகளாக அரசியல் களத்தில் நிற்கிறேன் நான்” என்று ஆவேசமாக பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com