”உருவ கேலி செய்தார்” - திமுக தலைவர் ஸ்டாலின் மீது தவெக புகார்!!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரைகள் களைக்கட்டி வருகின்றன. மதுராந்தகத்தில் நேற்றைய தினம் முதல்வரும் தவெக தலைவருமான விஜய் சாலைவலத்தில் ஈடுபட்டார்.
அதேசமயம், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தாரபுரத்தில், அக்கட்சியின் வேட்பாளர் சுகன்யா-வை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளரான சத்யபாமாவை உருவகேலி செய்வதுபோலப் அவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு, தவெக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச்சூழலில் தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்கள் கட்சி வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்து இழிவுபடுத்திப் பேசியதாக தவெக வழக்கறிஞர் பிரிவு சார்பில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரில், " எப்படித்தான் அந்த உருவத்தை வைத்து பல்டி அடிச்சாங்கனு தெரியவில்லை என தவெக வேட்பாளர் சத்யபாமவை உருவக்கேலி செய்யும் வகையில் பேசியிருக்கிறார் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின். எனவே, தமிழ்நாடு பெண்களைத் துன்புறுத்துதல் தடைச் சட்டம். 1998. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். 1951 ஆகியவற்றின் பொருந்தும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து (FIR) சட்டப்படியான விசாரணையும் தண்டனை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்” என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

