பாஜக தலைமையில் மற்றும் பலர்.. திமுக, அதிமுக என மாறிமாறி விமர்சித்த விஜய்.. முழு உரை!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயராகி வருகின்றனர். தவெக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்குகொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும் கூட, தவெக உடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை. இந்த நிலையில் தான், 2024 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடித்து வைக்கிறது.
இதையொட்டி, இன்று காலை 10.30 மணிக்கு பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் 3 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை, அக்கட்சியின் தலைவர் விஜய் கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தவெக கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், தவெக நிர்வாகிகளிடம் வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் நோக்கிய அடுத்தக் கட்ட நகர்வுகள் நோக்கியும், தேர்தல் பணிகள் குறித்தும் உரையாற்றியிருக்கிறார். தொடர்ந்து, திமுக குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
மக்களின் கண்ணீர் துடைக்கவே தவெக உருவாக்கப்பட்டது!
இதுகுறித்து அவர் பேசுகையில், ”1977-ல் எம்.ஜி.ஆர் ஒருமுறை ரேடியோ ஒன்றிற்கு கொடுத்தார். அப்போது அவர் பேசும்போது, பேரறிஞர் அண்ணா அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்களே என்பதை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன் அந்த கண்ணீரை துடைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கமே அதிமுக என்று கூறினார். அதுபோலவே, 2017க்குப் பிறகும், 2021க்குப் பிறகும் காமராஜர் இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர் இடத்தில் இப்பட்டிப்பட்டவர்கள் இருக்கிறார்களே என தமிழக மக்கள் கண்ணீர் வடித்தார்கள். தற்போது, இந்தக் கண்ணீரை துடைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கமே தமிழக வெற்றிக் கழகம். இப்படி நாம் பேசுவதால் சிலர் கொந்தளிப்பார்கள். அதை நாம் பெரிதுபடுத்தக் கூடாது.
அரசியலில் பழம் தின்றவர்களுக்கு கோட்டையை கனவாக்கியவர் எம்.ஜி.ஆர்!
எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் அமர்ந்த பிறகும் கூட நடிகர் கட்சி விமர்சித்தார்கள். அவர்களுக்கு கொந்தளிப்பது தான் வேலை. எம்.ஜி.ஆர் மட்டுமில்லாமல் அவர்கள் தொண்டர்களையும் கூட, பளபளப்பாக இருப்பதையும், ஜொலிஜொலிப்பதையும் பார்த்தால் பல் இளிப்பவர்கள் என விமர்சித்தார்கள். ஆனால், அவர்களே, இன்று நாம் கட்சி தொடங்கிய பிறகு, எம்.ஜி.ஆர் 1950 களில் கட்சியில் இருந்தார். அவருக்கு அனுபவம் என்ன தெரியுமா? விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது எனக் கேட்கிறார்கள். இவர்கள் தான் அன்று, எம்.ஜி.ஆர்-க்கு அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் எனக் கூறினார்கள்.
ஆனால், இதையெல்லாம் பார்த்த மக்கள் எம்.ஜி.ஆர்-ஐ வெற்றியடைய வைத்து, அரசியல் பழம் தின்னவர்களுக்குக் கூட எம்.ஜி.ஆர் இருக்கும் வரைக்கும் கோட்டையை கனவாக மாற்றினார்கள். காமராஜரைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை, அவருக்கு இலக்கியம் தெரியுமா என என்னென்வோ சொல்லி கொந்தளித்தார்கள். அதுபோலவே, நம்மைப் பார்த்தும் கொந்தளிக்காதவர்கள். திமுகவுக்கு அதுமட்டும் தான் தெரியும். அவர்கள் செய்யும் ஊழல்களை எடுத்துச் சொன்னால் 50 வருடத்திற்கு முன்பு போலவே, பழைய டப்பாவை உருட்டுகிறார்கள்.
அதற்காக, நாம் தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருக்கப்போவது இல்லை. நம்மைத் தவிர அவர்களை எதிர்க்க யாருக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. நாம் தான் மக்களின் ஒரே பிரதிநிதி.
இந்த டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால், அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என்று தான் குரல் கூறியிருப்பார்.
பாஜக தலைமையில் மற்றும் பலர்..
அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலில் 3 முனைப் போட்டி 4 முனைப் போட்டி எனக் கூறுகிறார்கள். அதாவது, மக்கள் சக்தியுடன் தவெக நாம் ஒரு பக்கம். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒருபக்கம். அடுத்து, பாஜக தலைமையில் மற்றும் பலர். ஆனால், எத்தனை அணிகள் வந்தாலும், திமுகவை வீழ்த்த நம்மால் மட்டுமே முடியும். இந்த நிலையில், விஜய் வீட்டை விட்டு விட்டு வெளியே வா என மீண்டும் மீண்டும் அழைக்கின்றபோது, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய விஜயை கூப்பிடுவது போல இருக்கு. பொறுத்திருங்கள், தேர்தல் நாளில் வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு எல்லோர் வீட்டில் இருக்கு ஒவ்வொரு விஜயும் வருவார்கள்.
அதேபோல, தேர்தல் கருத்துக் கணிப்புக்களை பலரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நேர்மையாக வெளியிடுகிறார்கள்.. பலர் கடுப்பில் கருத்து கணிப்பு வெளியிடுகிறார்கள். நான் எதையும் தவறு சொல்லவில்லை. ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் போய் கருத்துக் கணிப்பு எடுத்துப் பாருங்கள் எல்லோர் வீட்டிலும் தவெக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் கூட நன்றாக தூங்கும் போது எழுப்பிக் கேட்டால் விசில் சின்னத்துக்கு எனக் கூறி விடுவார். தமிழ்நாடு முழுவதும் விசில் சின்னம் போய் சேர்ந்திருக்கிறது.
தமிழக மக்கள் நமக்கு வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது தான் கள நிலவரம். தீய சக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும். தமிழக மக்களுக்கு நாம் மட்டும் தான் ஒரே தீர்வு. எத்தனை இஞ்சின் வந்தாலும், டாப் இஞ்சின் நாம் தான். தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக நம்முடன் இருக்கிறார்கள். தமிழக மக்கள் விசில் ஊதுவதில் தீய சக்தியும் ஊழல் சக்தியும் தெரித்து ஓடும். அன்று, கோட்டையில் தவெக எழும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
