\
TVK Horse-Trading Case: Police Question Senthil Balaji
செந்தில் பாலாஜிகோப்பு படம்

தவெக குதிரை பேர வழக்கு.. செந்தில் பாலாஜியிடம் காவல்துறை விசாரணை!!

திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்த செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
Published on

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வராமல் இருப்பதற்காக தன்னிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிPt web

தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், பேரம் பேசியதாகக் கூறப்படும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பட்டது. எனினும், அவர் ஆஜராகவில்லை.

இதுதொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து, உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும், அவரது சகோதரர் அசோக்குமாருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிPt web

இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். ஆனால் கடந்த 2 தினங்களாக ஆஜராகவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் பார் டெண்டர், மதுபான கொள்முதல், வாகன டெண்டர், காலி பாட்டில்கள் சேகரிப்பு ஆகியவற்றில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி. விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் 6 நாட்களுக்கு மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்தச் சூழலில், இன்று (ஆகஸ்ட் 10) திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்த செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் பாலாஜி, மக்கள் பணிகளில் கவனம் செலுத்தாமல் வழக்குகளை போடுவதில் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி அத்தனை வழக்குகளும் பொய்யானவை என்று நிரூபித்து காட்டுவோம். குதிரை பேர வழக்கில் கைதானவர் பெயர் FIR இல் இல்லை என்று கூறியுள்ளார்.

TVK Horse-Trading Case: Police Question Senthil Balaji
காவிரி நீர்: கர்நாடகாவில் போராட்டம் தீவிரம்.. ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சி ரத்து!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com