\
TVK Govt Completes 100 Days: Vijay Lists Achievements
விஜய்X

”100 நாள் ஆட்சியின் சாதனைகள்” - வீடியோ வெளியிட்ட தவெக அரசு!!

தவெக அரசு 100 நாள் ஆட்சியை முன்னிட்டு முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் சாதனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
Published on

தவெக அரசு பொறுப்பேற்று 100 நாள்கள் ஆன நிலையில் முதல்வர் விஜய் தனது தலைமையிலான ஆட்சியின் சிறப்புத் திட்டங்கள், சாதனைகள் குறித்து ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் திருமண நிதியுதவியாக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணனின் சீர்' திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்மார்களுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதி, சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளன.

விஜய்
விஜய்x

விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, கரும்புக்கும் நெல்லுக்கும் சிறப்பு ஊக்குவிப்புத் தொகை அறிவிக்கப்பட்டிருப்பது போன்றவையும் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்பதும், 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்பதும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், 'வெற்றி மடிக்கணினி' திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும் என்பதும் முதல்வர் விஜய் ஆட்சியின் சாதனைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்துக்கு ரூ.710 கோடி, 'வெற்றி வீடு' திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஆகிய திட்டங்களும் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பது குறித்தும், கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது குறித்தும், முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்தும் சாதனை பட்டியல் பேசுகிறது. இறுதியாக வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகம் குறித்து இந்தச் சாதனைப் பட்டியல் குறிப்பிடுகிறது.

TVK Govt Completes 100 Days: Vijay Lists Achievements
”அரசின் விளக்கம் முறையாக இல்லை” சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com