பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.. கட்சியில் இருந்து நீக்கம்!
தவெகவின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மவுண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலந்தூரைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருக்கு, வேம்புலி மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி தொடர்ச்சியாக அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக, வீட்டில் அந்தப் பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் சென்ற வேம்புலி, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பெண் கூச்சலிட்டதும் வேம்புலி தப்பிச் சென்றார். இதனையடுத்து, மவுண்ட் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகி வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆம் தேதி மவுண்ட் போலீசார், தவெக நிர்வாகி வேம்புலி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், வேம்புலியை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தவெக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து மவுண்ட் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

