திமுக தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன்? - கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்ட திமுக, முதன்முறையாக தேர்தலை சந்தித்த தவெகவிடம் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. திமுக அரசின் கடந்த 5 ஆண்டு திட்டங்களை முன்னிறுத்தி முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்த நிலையிலும், அது எடுபடவில்லை என்பதே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக, 59 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றிருந்ததும், முன்னாள் முதல்வர் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்திருந்ததும் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தசூழலில் தான், திமுகவின் தோல்வி குறித்து ஆராய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், கடந்த மாதம் 36 பேர் கொண்ட 19 குழுக்களை நியமித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த இக்குழுக்கள், தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து, வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரின் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கள ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது ஏன்? என்பது குறித்த கள ஆய்வுக்குழுவின் அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
அதன்படி, கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தாததால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து இருக்கின்றனர். மேலும், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் அறங்காவலர் குழு நியமன பொறுப்புகளில், அதிமுகவில் இருந்து திமுக வுக்கு வந்தவர்களை அப்போதைய அமைச்சர் சேகர்பாபு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டதாக கள ஆய்வில் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல அமைச்சர்களின் உதவியாளர்களே முட்டுக்கட்டை செய்ததும், பல முறை காத்திருந்தும் அமைச்சர்களை பார்க்கமுடியுமால் திரும்பி சென்றதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, களத்தில் திமுக அரசு - திமுக கட்சி என இரண்டாக பிரிந்து நின்றது நிலையான வாக்காளர்களை உருவாக்க முடியாமல் போனதாகவும், மக்களின் குறைகளை போக்க மக்கள் கேட்கும் அடிப்படை வசதிகளை செய்து தர உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்கும் திட்டங்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, மகளிர் உரிமை தொகை போதுமான எண்ணிக்கையில் கொடுக்காதது மற்றும் உரிமைத் தொகை கிடைக்காத மகளிரிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறி இருக்கின்றனர்.
மகளிரிடையே விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை எடுத்து கூறினால், மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. கட்சியில் உள்ள இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்தவில்லை. அரசில் உள்ள தற்காலிக நியமன பொறுப்புகளில் கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. கட்சி பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுக்கொள்ளவில்லை; அவர்களை தேர்தல் பணிக்கும் பயன்படுத்திக்கொள்ளவில்லை உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய 3000 பக்கங்கள் அடங்கிய ஆய்வு திமுக தலைவர் ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பித்துள்ளனர்.

