தவெக கொடிக்கம்பம் அனுமதி கோரிய மனு - 6 வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு
செய்தியாளர்: V.M.சுப்பையா
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் தவெக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் சரத் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ”திருவீதி அம்மன் கோயில் தெருவின் மூலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடிக் கம்பங்களால் எந்த இடையூறும் இல்லை. அந்தப் பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தவெக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத், மீண்டும் இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.