என்ஐஏ கைது செய்த காஷ்மீரின் மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் யார்? - பின்புலப் பார்வை

என்ஐஏ கைது செய்த காஷ்மீரின் மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் யார்? - பின்புலப் பார்வை
என்ஐஏ கைது செய்த காஷ்மீரின் மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் யார்? - பின்புலப் பார்வை

காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ - NIA) கைது செய்துள்ளது சர்வதேச கவனம் பெற்றுள்ளது. குர்ரம் பர்வேஸ் யார், கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

என்ஐஏ அதிகாரிகள் நேற்று காஷ்மீரை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ய முயற்சித்தது, தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல் மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ல் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து காஷ்மீரில் மனித உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாக அம்மாநில கட்சிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்துவரும் நிலையில், பர்வேஸ் கைது நடந்துள்ளது.

யார் இந்த குர்ரம் பர்வேஸ்?

ஸ்ரீநகரின் சோன்வார் பகுதிதான் பர்வேஸுக்கு பூர்விகம். இந்தப் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் பர்ன் ஹால் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார் பர்வேஸ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், பர்வேஸ் மனைவி சமீனா குர்ரம் அரசுப் பணியாளராக சேவையாற்றி வருகிறார்.

கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காஷ்மீரின் குப்வாராவில் உள்ள சண்டிகாம் அருகே வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது கண்ணிவெடி வெடித்ததில் பர்வேஸின் வலது கை துண்டிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் சிவில் சொசைட்டி (ஜேகேசிசிஎஸ்) என்ற அமைப்பில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த அமைப்பு ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட தன்னார்வ அமைப்பாகும்.

இந்த அமைப்பு காஷ்மீரில் பல்வேறு மனித உரிமை மீறல்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு அரசு அமைப்புகளால் கடத்தப்படுபவர்களை கண்டுபிடிக்க அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதில் பர்வேஸ் முக்கிய பங்கு கொண்டுள்ளார். இதே அமைப்பு 2009-ல் 'புதைக்கப்பட்ட சான்றுகள்' என்ற தலைப்பில் காஷீமீரில் உள்ள கல்லறைகளில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள பிணங்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டது.

அப்போது அந்த அறிக்கை தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் 55 கிராமங்களின் கல்லறைகளில் 2,700 அடையாளம் தெரியாத நபர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்று அப்போது அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இது சர்வேதேச அளவில் கவனம் பெற பின்னர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதேபோல் இந்த அமைப்பால் தயாரிக்கப்பட்ட காஷ்மீரில் மீறப்படும் மனித உரிமைகள் குறித்த அறிக்கை 2018-ல் ஐநா சபையின் மனித உரிமைகள் கவுன்சிலால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை மோடி அரசாங்கத்தை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. என்றாலும் பின்னாளில் இந்த அறிக்கையை `அடிப்படை ஆதாரமற்றது' எனக் கூறி இந்திய அரசு நிராகரித்தது.



ஜேகேசிசிஎஸ் அமைப்பில் தான் காட்டிய செயல்பாடுகளால் பர்வேஸ் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா மன்றத்தில் பேசுவதற்காக ஜெனீவா செல்லும்போது செப்டம்பர் 15, 2016 அன்று பர்வேஸ் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் சுமார் 76 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பர்வேஸ் அதன் பிறகே விடுதலை செய்யப்பட்டார்.

இந்த கைதுக்கு பிறகு தொடர்ந்து அரசு அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டு வந்தார் பர்வேஸ். கடந்த ஆண்டு அக்டோபரில் கூட, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு சோதனைக்குப் பிறகு, ஜேகேசிசிஎஸ் அமைப்பும் தங்களின் வருடாந்திர அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்தியது. பர்வேஸும் முன்பு போல அதிக ஈடுபாடு காட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் பர்வேஸ் இந்த சோதனைக்கு பிறகு பெரிதாக ட்வீட் எதுவும் பதிவிடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் என்ஐஏ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சில நாட்கள் முன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் நிலைமை குறித்து பேசிய நிலையில் இந்த கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பலர் தற்போது பர்வேஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐ.நா.வின் மனித உரிமை அதிகாரி மேரி லாலர் என்பவர், ``பர்வேஸ் காஷ்மீரில் கைது செய்யப்பட்டதாகவும், பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிய முடிகிறது. அவர் அபாயத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் ஒன்றும் பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு மனித உரிமைப் பாதுகாவலர்" என்று கூறியுள்ளார். சர்வேதேச நாடுகளைச் சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்து வருவதால் பர்வேஸ் கைது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com