’உங்களுக்கு பிடிக்கலனா அகற்றுவீங்களா..’ இரவில் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த அருண்ராஜ்!
திருச்செங்கோட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக தவெக பேனரை நகராட்சி ஊழியர்கள் அகற்றியதைத் தொடர்ந்து, அருண்ராஜ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2026 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்செங்கோட்டில் அனுமதியின்றி தவெக பேனர் வைக்கப்பட்டிருப்பதாக கூறி நகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்...இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைராகி வருகிறது..அங்கு நடந்தது என்ன பார்க்கலாம்!
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் போட்டியிட போவதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர்..
அதே சமயம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர களப் பணியில் அருண்ராஜ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது..
திருச்செங்கோடு தொகுதியின், அதிகாரப்பூர்வ வேட்பாளராக அருண்ராஜ் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தவெக நிர்வாகிகள் அங்கு தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது...
இந்த நிலையில் நாளை திருச்செங்கோட்டின் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலின் தேர் திருவிழா நடைபெற உள்ளது.இந்த விழாவுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக ஓங்காளியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனரில், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் ஆகியோர் உருவபடத்துடன் "புதிய தேர் வெள்ளோட்டம் மாற்றத்திற்கான முன்னோட்டம்" என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன..
இந்தப் பேனர் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி நகராட்சி ஊழியர்கள் இரவோடு இராவாக அகற்றியதாக கூறப்படுகிறது..இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தவெக அருண்ராஜ் நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..
அதுமட்டுமின்றி, "பேனரை எந்த விதியின் கீழ் அகற்றினீர்கள்..ஏன் இரவு நேரத்தில் இப்படி தொந்தரவு செய்கின்றீர்கள் என சரமாரி கேள்வி கேட்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் தவெக பேனர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

