தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? முதல்வர் விஜயின் முக்கிய முடிவு?
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. எனினும், ஆட்சியமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. முன்னதாக, வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்திருந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள், பின்னர் தவெக அமைச்சரவையில் இணைந்தன. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவ்வாறு, கூட்டணி கட்சிகளின் 4 அமைச்சர்கள் மற்றும் முதல்வருடன் சேர்த்து 35 பேர் தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றனர்.
இந்தச்சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் 5 தொடங்கிய தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன்பிறகு, அமைச்சரவையில் மாற்றங்கள் நடக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் தவெக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை பொறுப்பில் இருந்து விடுவித்து புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், அமைச்சர் ராஜ்மோகனிடன் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி விளம்பரத்துறை, திரைப்படத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் இருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையை, ஏற்கனவே அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கு ஒதுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அமைச்சர் கீர்த்தனாவிடம் இருக்கும் தொழில்துறையை ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கலாம் எனவும் அமைச்சர் கீர்த்தனாவுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி இடையே துறை பரிமாற்றம் நடக்கலாம் எனவும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் மாறுபாடு நிகழலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குள்ளாகி வரும் சரத்குமார் அமைச்சரவையில் விடுவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

