“என் உயிருக்கு ஆபத்து”.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்!! அலுவலகத்திற்கு வெளியே.. நடந்தது என்ன ?
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் தவெக பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா. இதுதொடர்பாக அளித்துள்ள புகார் கடிதத்தில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டுள்ளார் ஆதவ் தரப்பு வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி.. என்ன நடக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, அக்கட்சி சார்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகிறார். இதற்கிடையேதான், ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி, சென்னை தி.நகரில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் வெளியில் மர்ம நபர்கள் சிலர் ஆயுதத்துடன் நோட்டமிட்டு வருவதாகவும், ஆதவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகாரில், கடந்த 10ம் தேதி அன்று ஆட்டோவில் வந்த 5 பேர் அடங்கிய குழு, ஆயுதங்களுடன் அலுவலகத்திற்கு வெளியே நோட்டமிட்டதாகவும், யார் என்று விசாரித்தபோது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்துவிட்டு புறப்பட்டதாகவும், காலை 11 மணி மற்றும் ஒன்றரை மணி அளவில் அதே ஆட்டோ மீண்டும் அங்கு வந்து நோட்டமிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே, பிற்பகல் மூன்றரை மணியளவில் அதே ஆட்டோவில் 7 பேர் மீண்டும் வந்து நோட்டமிட்டு சென்றதாகவும், ஒன்றரை டூ இரண்டு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், திமுக கொடி பொறுத்தப்பட்ட இனோவா கார் ஒன்று அலுவலகத்திற்கு வெளியில் இருந்து கண்காணித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆதவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், புகாரின் தீவிரம் கருதி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.