தூத்துக்குடி: தொடர் மழை... தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு - குடியிருப்புகளை சூழந்துள்ள மழைநீர்
செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாகவே விட்டுவிட்டு சாரல் மழையும் கன மழையுமாக பெய்து வந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாநகர தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கி, குளம் போல் காட்சியளித்தது.
நேற்று மாலை கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய மழை நீரால் பிஎன்டி காலனி, கதிர்வேல் நகர் போன்ற பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மாலை முதல் மழை முற்றிலும் நின்று விட்டதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி உதவ வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“எங்களுக்கு இலவசங்கள் கொடுப்பதை தவிர்த்து விட்டு எங்கள் பகுதியில் இருக்கக் கூடிய மழை நீரை வெளியே அகற்ற வேண்டும்” எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்