”விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்..” - டிடிவி தினகரன் பேச்சு
2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன் தான் சொல்லவேண்டும் என்று கூறிய டிடிவி தினகரன், விஜய் தலைமையில் ஒரு அணி அமையும் என்று கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபக்கம் ஆளும் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லாமல் இருந்துவரும் நிலையில், எதிர்பக்கம் அதிமுக மற்றும் பாஜக தங்களுடைய கூட்டணியை உறுதிசெய்துள்ளன.
இந்த சூழலில் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய், தன்னுடைய தவெக கட்சியை எந்தளவு கட்டமைக்க போகிறார் என்ற எதிர்பாப்பும் எழுந்துள்ளது. மற்ற கட்சிகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன, 2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் அமையப்போகின்றன என்ற குழப்பமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது விஜய் தலைமையில் ஒரு அணி அமையும் என டிடிவி தினகரன் பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விஜய் தலைமையில் கூட்டணி அமையும்..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி சட்டமன்ற தொகுதி கழக செயல் வீரர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வந்தால் தான், நாட்டிற்கு பாதுகாப்பு இருக்கும், இந்தியா வல்லரசு ஆகும் என்பதால் நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தோம். ஆனால் தற்போது என்டிஏ கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில் அளித்தால் எங்களுக்கும் நன்றாக இருக்கும் என கூறினார்.
முதல்வரின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கத்திரிக்காய் முற்றிவிட்டால் சந்தைக்கு வந்துவிடும், முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நோக்கம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரே கட்சியாக இணையாது. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.
மேலும் சட்டமன்றத் தேர்தலின் போது ஆளுங்கட்சி திமுக, என்டிஏ உள்ளது. அதேபோல் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் தலைமையில் ஒரு அணி அமையும் என கூறினார். எங்களின் கூட்டணி நிலைபாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.