பிரதமர் சொல்லும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் 'டபுள் எஞ்சின்' அரசை 'டப்பா எஞ்சின்' என விமர்சித்து, தமிழ்நாட்டில் அது செயல்படாது என எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர், பாஜக அரசின் தடைகளை தகர்த்து தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், டபுள் எஞ்சின் மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகத்தில் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக அரசு ஒரு க்ரைம், மாஃபியா, கரப்சன் அடங்கிய CMC அரசாங்கம் என்றும், அது ஒரு குடும்பத்திற்காக மட்டுமே உழைக்கிறது என்றும் விமர்சித்தார்.
மேலும் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற டபுள் எஞ்சின் அரசு நிச்சயம் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் என்றும், தமிழ்நாட்டை பாதுகாப்பான, வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம் என்றும் பேசியிருந்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் மேடைப்பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமர் சொல்லும் டப்பா எஞ்சின் ஓடாது..
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், “ பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!
மாண்புமிகு பிரதமர் அவர்களே…
ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…
நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
தில்லியின் ஆணவத்துக்குத் #தமிழ்நாடு_தலைகுனியாது!” என பதிவிட்டுள்ளார்.

