“அவர்கள் அருகில் இருப்பவர்களே என்னிடம் சொன்னது இதுதான்” மதுரை மாநாடு குறித்து டிடிவி தினகரன்

“எழுச்சி மாநாடு இல்லை. வீழ்ச்சி மாநாடு. அதிகபட்சமாக 2.5 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்று இருப்பார்கள். துரோகி பழனிச்சாமிக்கு துரோகத் தமிழர் என்று பட்டம் கொடுத்திருக்கலாம்” என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

தஞ்சையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடந்த மாநாடு குறித்து பேசிய டிடிவி தினகரன், “அது எழுச்சி மாநாடு அல்ல.. பழனிசாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு. முன்னாள் அமைச்சர்களெல்லாம் 15 லட்சம், 20 லட்சம், 25 லட்சத்தை கூட்டி விடுவோம் என சொன்னார்கள். அவர்கள் அருகில் இருப்பவர்களே வருத்தப்பட்டு என்னிடம் ‘இவ்வளவு பணத்தை செலவு செய்தும் வண்டி வாகனத்தை ஏற்பாடு செய்தும் அதிகபட்சம் மாநாட்டிற்கு வந்தவர்கள் 2 முதல் 2.5 லட்சம் பேர் தான்’ என்றனர்.

இதை பலதரப்பட்ட நண்பர்கள், மதுரையில் உள்ளவர்கள், பழனிசாமி கம்பெனியில் உள்ள சில நண்பர்கள் என்னிடம் வருத்தப்பட்டு சொன்னார்கள். மாநாட்டிற்கு வரக்கூறி மாவட்டம் மாவட்டமாக போய் கூட்டம் நடத்தினார்கள், ஒன்றியங்களில் நகரங்களில் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதிகபட்சம் 2.50 லட்சம் பேர் தான் மாநாட்டில் கலந்துகொண்டிருப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து டிடிவி தினகரனிடம் ‘இபிஎஸ்-க்கு புரட்சித் தமிழர் என பட்டம் கொடுத்துள்ளார்கள்’ என்று செய்தியாளர்கள் சொல்லவே, “புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் ஆகிவிடும். துரோகத்திற்கு எடுத்துக்காட்டான தமிழர் என்று வேண்டுமானால் கொடுக்கலாம். அவர் என்ன புரட்சி செய்துவிட்டார்?

காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு பதவியை கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்வது, ஆட்சியை நீட்டிக்க காரணமாக இருந்த பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்வது என துரோகத்தாலும் தவறாக ஈட்டிய பணபலத்தாலும் கட்சியை கபளீகரம் செய்து வைத்திருப்பதுதான் சாதனை என்றால் அதற்காக புரட்சி செய்தார் என சொல்லுவார்களானால் அது வெட்கக்கேடான விஷயம்” என்றார்.

டிடிவி தினகரன் பேசியதன் முழு காணொளியையும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com