“செத்தாலும் எங்க சின்னம் தான்.. தயவு செஞ்சு எங்களை புண்படுத்தாதீங்க” - கண்ணீர்விட்ட துரை வைகோ #video

”என் கட்சிக்காகவும், என் அப்பாவுக்காகவும் 30 வருடம் உழைத்து உழைத்து தேய்ந்துவிட்டார்கள் எங்கள் ஆட்கள்” கண்ணீர் மல்கிய துரை வைகோ
துரை வைகோ
துரை வைகோpt web

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் பரப்புரை ஈடுபட ஆரம்பித்துவிட்டன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. வேட்பாளராக மதிமுகவின் துரை வைகோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலையத்தில் திமுக மதிமுக சார்பில் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய வேட்பாளர் துரைவைகோ, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாத போதுதான், நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். கட்சிக்காரர்கள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விட்டார்கள்.

இப்பொழுதும் நான் பெரிய வேட்கையோடு, ஆசையோடு அரசியலில் இருக்கிறேனா என்றால் கிடையவே கிடையாது. உண்மையாகவே சொல்கிறேன். மனசை தொட்டு சொல்கிறேன். இப்பொழுதும் தேர்தலில் நிற்கிறேன் என்று நான் சொல்லவில்லை. வேறு யாரேனும் நிறுத்துங்கள், நான் பணியாற்றுகிறேன் என கூறினேன். ஏனென்றால் என் கட்சிக்காகவும், என் அப்பாவுக்காகவும் 30 வருடம் உழைத்து உழைத்து தேய்ந்துவிட்டார்கள் எங்கள் ஆட்கள்” என அழுதபடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “செத்தாலும் எங்கள் சின்னம் தான்; நான் சுயமரியாதைக்காரன்!. என் அப்பா உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டார். நாங்கள் உதயசூரியன் சின்னத்தை உயிராக நேசிக்கிறோம்; மதிக்கிறோம். திமுகவை உயிராக நேசிக்கிறோம். ஆனால், மதிமுகவில் உள்ள பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்க முடியாது. நீங்கள் வேறு வேட்பாளர் நிறுத்துங்கள், நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம். திராவிடர் கழகம் போல் அரசியலை நடத்திவிட்டு போகிறோம்.

திராவிட சக்திகளை அழித்துவிட்டு மதவாத சக்திகளை வேரூன்ற வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துவிட கூடாது என்ற நோக்கத்தில் தான் நாம் எல்லோரும் சேர்ந்துள்ளோம். ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. நாங்கள் சின்ன கட்சி தான், பெரிய சக்தி கிடையாது. நீங்கள் சீட்டே கொடுக்கவில்லை என்றாலும் 40 தொகுதிகளிலும் உங்களுக்கு உறுதுணையாக பணியாற்ற தயாராக இருக்கிறோம். எங்களை புண்படுத்தாதீர்கள்” என தெரிவித்தார். முன்னதாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமே என்ற தொனியில் கருத்துக்கள் [முன் வைக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com