திருவானைக்காவல் கோயில் தேர்த் திருவிழா – அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
செய்தியாளர்: பிருந்தா
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது. திருவானைக்காவல் கோயிலில் மண்டல பிரம்மோற்சவ பெருவிழா 08.03.25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நேற்று இரவு (29ம் தேதி) தெருவடைச்சான் எனப்படும் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான இரண்டு தேரில், முதல் தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி உள்ளனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
அம்பாள் எழுந்தருளி உள்ள இரண்டாவது தேர், முதல் தேர் நிலைக்கு வந்த பிறகு பக்தர்களால் இழுக்கப்படுவது வழக்கம். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று ஓம் நமச்சிவாய, அரோகரா என்ற முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். சிவ வாத்தியங்கள் முழங்க, பாராயணம் பாடியபடி தேர் கோயிலின் நான்கு வீதிகளில் வலம் வருகிறது.