திருப்பூர் | காவல்துறைக்கு பின் வனத்துறை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின நபர் மரணம்!
செய்தியாளர் : தி.கார்வேந்தபிரபு
திருப்பூர் மாவட்டம் மேல் குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரான மாரிமுத்து கடந்த 2017ஆம் ஆண்டு கஞ்சா செடி வளர்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கு இத்தனை ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் நேற்று முன் தினம் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார். தன் விடுதலைக்குக் காரணமான, தனக்காக வாதாடிய வழக்கறிஞரை சந்தித்து நன்றி சொல்லலாம் என சென்ற மாரிமுத்து மீண்டும் பேருந்தில் வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உடுமலைப்பேட்டை அருகே தமிழக கேரள எல்லைப்பகுதியில் உள்ள சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்துக்கு உட்பட்ட சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடந்துள்ளது. அந்த சோதனையின்போது சிறுத்தை பல் வைத்திருந்ததாக மாரிமுத்துவை கேரளா வனத் துறை பிடித்துள்ளது. பின்னர் கேரள வனத் துறையே மாரிமுத்துவை தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மாரிமுத்துவை விசாரணைக்காக உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு வனத் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சூழலில் தான் மாரிமுத்து இன்று காலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஓய்வறையில் இருந்து கழிவறைக்கு கூட்டிச் சென்றபோது உள்ளே தாழ்ப்பாழ் போட்டுக்கொண்ட மாரிமுத்து திடீரென தான் அணிந்திருந்த லுங்கியைக் கட்டி தற்கொலை செய்துகொண்டார் என வனத் துறை தெரிவித்துள்ளது.
வனத்துறையினர் டார்ச்சர் தான் மரணத்துக்கு காரணமா?
இந்த செய்தி வெளியில் கசிந்த நிலையில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட வன அலுவலர் விரைந்தனர். வனச்சரக அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மாரிமுத்து எப்போது விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார் என்பன உள்ளிட்ட விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறந்த மாரிமுத்துவின் உடலை அவரது மனைவி, உறவினர்கள் வந்த பின்னரே இறக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணி வலியுறுத்தியுள்ளார். நேற்று தன்னை வந்து பார்த்துவிட்டு திரும்பியவர் இன்றைக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைக்காக ஒருவரை அழைத்துச் செல்லும்போது பின்பற்றவேண்டிய விதிகள் குறித்து நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை வனத் துறையினர் மீறியுள்ளனர். மாரிமுத்து எப்படி தூக்கிட்டு இறந்தார் என்பதில் மர்மம் உள்ளது? அவர் தாக்கப்பட்டாரா என்பதும் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட வனத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர் பாலசுப்பிரமணி புதிய தலைமுறை வாயிலாக கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மாரிமுத்துவின் உறவினர்கள் வந்து பார்த்த பின்னரே அவரது உடலை இறக்கி, உடற்கூராய்வுக்கு அனுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியினர் வனச்சரக அலுவலகம் முன் குவிந்து கொடியேந்தி போராட்டமும் நடத்தினர். மாரிமுத்துவின் மகள் தந்தையின் இறப்பு செய்தி கேட்டு கதறிய காட்சிகள் கண்ணீரை வரவழைக்கும் நிலையில், மாரிமுத்துவின் உடலில் காயங்கள் இருக்கிறதா என்பது கழிப்பறை கதவைத் திறந்து அவரது உடலை வெளியே எடுத்த பின்பே தெரியவரும்.
தனக்கு உதவிய வழக்கறிஞருக்கு நன்றி தெரிவித்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பிய பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்து தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன?... எப்படி அவர் கழிவறையில் தூக்கிட்டுக் கொண்டார்?... விசாரணை என்ற பெயரில் வனத் துறை அதிகாரிகளால் மாரிமுத்து தாக்கப்பட்டாரா என்ற கேள்விகளுக்கு விசாரணைக்குப் பின்னரே பதில் கிடைக்கும்...