ஏமாற்றி எழுதிவாங்கிய சொத்தை மீட்டுத் தாங்க.... மகன் மீது தந்தை புகார்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (85). இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மூத்த மகன் விபூஷணன் தனது தந்தையை திருநாவலூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தந்தையின் பெயரில் இருந்த 1 ஏக்கர் 64 சென்ட் விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விபூஷ்ணன் தனது தந்தையை சரிவர கவனிக்கவில்லை என்றும், இந்த சம்பவம் அறிந்த மற்ற மூன்று மகன்களும் தந்தையை கவனித்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக முதியவர் லட்சுமணன் ஆங்காங்கே உள்ள தனது உறவினர்கள் வீடுகளில் தங்கி கடினமான சூழலில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஊர் முக்கியஸ்தர்களின் உதவியோடு தனது மகன் தன்னிடமிருந்து எழுதி வாங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணீரோடு திருக்கோவிலூர் சார் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி உரிய விசாரணை நடத்தி பத்திரத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார ஆட்சியர் உறுதி அளித்தார்.