நிறுத்தப்பட்ட குரூப் 2, 2 ஏ தேர்வுகள்.. மாற்று தேதி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மார்ச் 15 அன்று தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டுகள் பிப்ரவரி 28க்குள் பதிவேற்றப்படும். தேர்வர்கள் OTR எண்ணைப் பயன்படுத்தி அனுமதி சீட்டினை பெறலாம்.
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன்படி, சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 828 அரசுப்பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-வின் முதல் நிலைத் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில், 10 ஆயிரத்து 583 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், முதன்மைத் தேர்வு நேற்று (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும், நந்தனம் அரசுக் கலைக் கல்லூரி, திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரி உள்ளிட்ட 7 மையங்கள் முதன்மைத் தேர்வுக்காக அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், நேற்று தேர்வு தொடங்குவதற்கு முன் தேர்வர்களின் தேர்வு மையங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து, நந்தனம் அரசுக்கல்லூரி தேர்வு மையத்தில் வினாத்தாளே வரவில்லை எனவும் புகாரெழுந்தது. இதையடுத்து, அரும்பாக்கம் தேர்வு மைய தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் காரணமாக தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்திருந்தார்.
டிஎன்பிஎஸ்சி-யின் செயல்பாடு குறித்து எதிர்கட்சிகள் உட்பட பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரக இருந்த சண்முக சுந்தரத்தை நீக்கி வெங்கடபிரியாவை தமிழக அரசு நியமித்தது. அதேசமயம், ஒத்திவைக்கப்பட்டத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த சூழலில் தான், குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுகள் மார்ச் 15 நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும், இத்தேர்வுக்கான அனுமதி சீட்டு (hall ticket) பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தேர்வர்கள் வழக்கமான OTR எண்ணைப் பயன்படுத்தி அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. முன்னதாக, தேர்வு கட்டுப்பாட்டு பதவியில் இருந்து சண்முக சுந்தரம் நீக்கபட்டிருக்கிறார் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், மறுதேதி அறிவிப்பிற்கான அறிக்கை சண்முக சுந்தரம் பெயரிலேயே வெளியிடப்பட்டிருக்கிறது.

