முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு சட்டமன்றம்

UGC புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

“இவர்களாக ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது?”
Published on

செய்தியாளர்: ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு சட்டமன்றம்

முதல்வர் பேசியதாவது

“எல்லோரும் படித்து, எல்லோரும் வேலைக்குப் போய், எல்லோரும் தலைநிமிர்வது பிடிக்காதவர்களால் தொடர்ச்சியாக கல்வித் துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. பள்ளிக் கல்வியைச் சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசுப் பொதுத் தேர்வு என்ற பெயரால் வடிகட்டி, வடிகட்டி அனைவரையும் கல்வியைத் தொடர முடியாமல் செய்யப் போகிறார்கள். அதனைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கனவைச் சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். தங்கை அனிதா உள்ளிட்ட எத்தனையோ உயிர்களை நாம் இழந்தோம். ஆனால், ஆண்டுதோறும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக், மதிப்பெண் குளறுபடி என்று எல்லா முறைகேடும் நடப்பதில் நம்பர் ஒன் தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
தனித்தீர்மானம் நிறைவேற்றம் முதல் செல்லூர் ராஜுவுக்கு சபாநாயகரின் பதில் வரை... சட்டமன்றத்தில் இன்று!

இதேபோல பல்கலைக்கழகங்களையும் சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும். அதற்காகத்தான் இப்படிச் செய்யப் போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆளுநர் - முதல்வர்
ஆளுநர் - முதல்வர்தமிழ்நாடு சட்டமன்றம்

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் யு.ஜி.சி. பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தார்.  நாம் அதனை ஏற்கவில்லை.  இந்த மோதலுக்கு ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்படாத நிலையில், தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவது சரியுமல்ல; முறையுமல்ல. இவர்களாக ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது?

மாநில அரசுகள் தங்கள் வளத்தில், பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்துக் கொள்கிற அக்கிரமமான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டி இருக்கிறது.  இந்த விதிமுறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயல்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவபர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால்தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாகக் கொடுக்க முடியும்.

நியமனப் பதவிகளில் ஒருசில ஆண்டுகள் இருந்துவிட்டுப் போய்விடுபவர்களுக்கு ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வைப் புரிந்துகொள்ள இயலாது. ஒன்றிய அரசு கல்வித் துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது இல்லை.

வரம்பற்ற கட்டணம், இடஒதுக்கீடு இல்லாத தன்மை என வரம்பு மீறும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கடிவாளம் போடுவதற்கு சிறு துரும்பும் கிள்ளிப் போட மறுக்கும் ஒன்றிய அரசு; தனது நிதிநிலை அறிக்கையில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வரும் ஒன்றிய அரசு; கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில் I.I.T., I.I.M., Central university போன்ற ஒரேயொரு புதிய உயர்கல்வி நிறுவனத்தைக் கூட அமைக்காத ஒன்றிய அரசு; I.I.T. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரது சட்டப்படியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய ஒன்றிய அரசு; மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உ‌‌‌ள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது; சுயநலமானது. நிச்சயமாக மாணவர் நலனை மனதில் கொண்டோ, கல்வித்தரத்தை மேம்படுத்தவோ இந்த முயற்சி நடைபெறவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
யுஜிசியின் புதிய விதிமுறைகள் | “அடுத்த தலைமுறை கல்வி பாதிக்கும்” - கல்வியாளர் நெடுஞ்செழியன்!

ஒரு தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியே பாடத்திட்டம் வகுத்துப் பட்டமும் வழங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, நூற்றாண்டு பெருமை கொண்ட கல்லூரிகளை அபகரிக்க எத்தனிப்பது அதிகார எதேச்சாதிகாரம். தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது; அப்படி இருக்கவும் முடியாது.

கல்லூரி
கல்லூரி

கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்காலத் தலைமுறையைக் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்ற முன்னுரையுடன் இந்தத் தீர்மானத்தை நான் உங்கள் அனுமதியோடு முன்மொழிகிறேன்” என்று முதல்வர் தெரிவித்தார்

முன்னதாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக யூ ஜி சி வெளியிட்ட வரைவுக் கொள்கைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக பாஜக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. அதேநேரம், அதிமுக இந்த தீர்மானத்துக்கு முழு ஆதரவையும் கொடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com