26 ஏக்கர்.. 2 ஆயிரம் கோடி... புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
செய்தியாளர் - கார்த்திகேயன்
புனித ஜார்ஜ் கோட்டைதான் தற்போது தமிழகத்தின தற்போதைய தலைமைச் செயலகமாகச் செயல்பட்டு வருகிறது. இதனை மாற்றி புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதன்பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, அந்த பிரம்மாண்ட கட்டடத்தை, பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியிருந்தார். இந்த நிலையில், தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜயும், தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை மாற்றியமைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலத்தில், தலைமைச் செயலகம் அமைக்க இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசின் பொதுத்துறைச் செயலாளர் சுந்தரவள்ளி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதிய தலைமைச் செயலகத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை பொதுப் பணித்துறை தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டடக் கலை நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு, கட்டட வடிவமைப்பு, வரைபடத்தைத் தயாரிக்கும் குழு, இறுதிக் கட்டட வடிவமைப்பு, ஒப்புதலை வழங்கும் குழு ஆகிய மூன்று தனித்தனி குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் எனப்படும் போர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 25.16 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு, தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளது.
வருவாய்த்துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களுடன் சேர்த்து மொத்தம் 26.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்தக் கட்டடம், 15 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு ஒரு சதுர அடி 22,000 வீதம், மொத்தம் ரூ.2,047 கோடியாக உள்ளது.
வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இந்தப் பகுதியில் இருந்து, சாந்தோம் முக்கியச் சாலையை எளிதில் அணுக முடியும். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம், 1958ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, சுமார் 1963 முதல் 1998 வரையில் சுமார் 1,380 அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தற்போது சிதிலமடைந்ததால், அதனை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

