14 ஆண்டு திருமண வாழ்க்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டெய்சி பிரிவதாக அறிவிப்பு! என்ன காரணம்?
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு திருமண உறவை பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார். குழந்தையின் நலனுக்காக இணைந்து பெற்றோர் பொறுப்பை தொடருவதாகவும், தனியுரிமையை மதிக்க வேண்டும் என டெய்சி கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் - M. மீரா
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் ஆகியோர் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்து பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகளான டெய்சி மார்ட்டின், இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெய்ஸி வெளியிட்ட பதிவில், கடந்த 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் அங்கம் வகித்து வந்தோம். அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பயணமாக எங்களது வாழ்க்கை அமைந்தது. நண்பர்கள், வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர் எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து ஒன்றாகப் பயணித்தோம்.
தற்போது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனியாகப் பயணிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் பிரிந்தாலும் தங்களது குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்காக இணைந்து பெற்றோர் பொறுப்பைத் தொடர்ந்து கவனிப்போம் என்றும் கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா மீது தனக்கு எப்போதும் மரியாதை இருப்பதாகவும், அவரது எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தை எதிர்கொள்ளும் தங்களுக்கு அனைவரும் தனிப்பட்ட இடத்தையும், தனியுரிமையையும் வழங்க வேண்டும் என்றும் டெய்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

