செங்கோட்டையன் - எஸ்.பி. வேலுமணி சந்திப்பு.. வெளியான வீடியோ!!
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனை கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி கே. பழனிசாமி. இதையடுத்து, திமுகவில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் தான், தவெகவில் இணைந்து அதிரடி காட்டினார் செங்கோட்டையன். தொடர்ந்து, இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைத்திருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்.
இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்துவருவதாக எஸ்.பி. வேலுமணி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் போர்க்குரல் எழுப்பினர். எனினும், ஒருக்கட்டத்தில் ஓய்ந்தாலும், 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கின்றனர். இதற்கு, முன்னாள் அதிமுக நிர்வாகியும் தற்போதைய தவெக நிர்வாகியுமான செங்கோட்டையனின் முக்கியம் எனக் கூறப்பட்டது.
இந்தச்சூழலில் தான், தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் போர்க்குரல் எழுப்பிய எஸ்.பி. வேலுமணி செங்கொட்டையனுடன் ஒன்றாக அமர்ந்து பேசும்படியான வீடியோ தற்போது வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழா ஒன்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்பி மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திருமண மண்டபத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் கலந்துரையாடினார். நீண்ட நேரம் திருமண மண்டபத்தில் அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது.
