“சிறப்பு பூஜைக்கு எந்த தடையும் விதிக்கவில்லை!”- பொய்செய்தி பரப்பியதாக நாளிதழுக்கு தமிழக அரசு கண்டனம்

அயோத்தியில் நாளை நடைபெறவிருக்கும் ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது என பரப்பப்பட்ட அவதூறான பொய்ச்செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் - தமிழ்நாடு அரசு
ராமர் கோவில் - தமிழ்நாடு அரசுweb

அயோத்தி ராமர் கோவிலில் நாளை கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சியை சிறப்பிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், உச்சநீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் என பல்வேறு துறையைச் சார்ந்த முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொள்ள மக்களும் பெருமளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் நாளை அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் அதேவேளையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதாக பொய்யான தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் தளத்தில் சலசலப்புகள் ஏற்பட்டன.

ராமர் கோவில் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு ராமர் கோவில்களில் தடையா? நிர்மலா சீதாராமன் Vs சேகர்பாபு இடையே தொடரும் ட்விட் மோதல்!

இதையடுத்து நாளை சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது அரசு கண்டனம் தெரிவிப்பதோடு சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில் - தமிழ்நாடு அரசு
ராமர் பிரதிஷ்டை: தமிழக கோவில்களில் அன்னதானம், பூஜைக்கு தடையா? இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்!

பொய்செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! தமிழ்நாடு அரசு கண்டனம்!

தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

சுமார் 400 ஆண்டுகளுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட 1,270 திருக்கோயில்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்திடும் வகையில் 2022-23ஆம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.

இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com