\
TN POLITICAL PARTYS
TN POLITICAL PARTYSAI

தமிழ்நாடு தேர்தல் செலவு! கோடிகளை வாரி இறைத்த கட்சிகள்! TOP-ல் இருக்கும் கட்சி எது?

சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு செய்த தேர்தல் செலவினங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Published on: 
Summary

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தவெக அதிக இடங்களை பெற்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மூலம் திமுக 197 கோடி, அதிமுக 112 கோடி, பாஜக 51.56 கோடி, காங்கிரஸ் 7 கோடி, நாம் தமிழர் 1.37 கோடி செலவு செய்தது வெளிப்பட்டுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

அனல் பறக்கும் பிரசாரம், பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், தலைவர்களின் தொடர் சுற்றுப்பயணங்கள் என பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களைப் பெற்ற தவெகவுக்கு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், முதலில் ஆதரவு தெரிவித்தது. பின்னர், திமுக கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு செய்த தேர்தல் செலவினங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், எந்தக் கட்சி எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தல் செலவுகளைப் பொறுத்தவரை, வேட்பாளர்கள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

MONEY
MONEYREUTERS

அதே நேரத்தில், அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரச் செலவுகள் தனியாகக் கணக்கிடப்பட்டு, கட்சிகள் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்கின்றன.

தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தாக்கல் செய்துள்ள செலவு அறிக்கைகளின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்காக திமுக சுமார் 197 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்காக மட்டும் 47 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை கட்சி அளவிலான பிரசாரம், விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணம் உள்ளிட்ட செலவுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN POLITICAL PARTYS
திருவண்ணாமலை| திமுக MP அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக 112 கோடி ரூபாயை தேர்தல் செலவாக அறிவித்துள்ளது. இதில் பெரும்பகுதியான சுமார் 109 கோடி ரூபாய் பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்களுக்காக சுமார் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அறிக்கையைத் தயாரித்து அச்சிடுவதற்காக 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

2026 ல் தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 286 கோடியே 99 லட்சம் ரூபாயை பாஜக செலவிட்டுள்ளது. இதில் பெரும்பகுதி மேற்கு வங்கத் தேர்தலுக்காக செலவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 51 கோடியே 56 லட்சம் ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ளதாக பாஜக கணக்கு தாக்கல் செய்துள்ளது.

CM VIJAY
CM VIJAY CM OF TAMILNADU

அதேபோல், காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 248 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ளதாக அக்கட்சி கணக்கு தாக்கல் செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, தேர்தல் பிரசாரத்துக்கு 93 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும், நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இதனுடன் பயணச் செலவு, விளம்பரச் செலவு உள்ளிட்டவற்றையும் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது. 2026 தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் செலவு அறிக்கையை இன்னும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை. அந்தக் கட்சியின் செலவுக் கணக்கு வெளியான பிறகே, ஒட்டுமொத்த தேர்தல் செலவுப் பட்டியலில் அதன் நிலை என்ன என்பது தெரியவரும்.

TN POLITICAL PARTYS
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு| 4 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com