\
TN CM Vijay divorce case sangeetha withdrawn family court verdict
விஜய், சங்கீதாஎக்ஸ் தளம்

முடிவுக்கு வந்த முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு | மனுவைத் திரும்பப் பெற்ற சங்கீதா!

விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக சங்கீதா தெரிவித்த நிலையில், முதல்வர் விஜயின் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
Published on

நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகவும், நடிகை ஒருவருடன் அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் விஜய் விவகாரத்து வழங்க மறுப்பதாகவும், தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது முதல் நாள் விசாரணை என்பதால் விஜய் சங்கீதா இருவரும் ஆஜராகுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. இருதரப்பிலும் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள். இதையடுத்து, மேலும் இருதரப்பும் ஆஜர் ஆகுவதற்கு ஏதுவாக ஜூன் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இவ்வழக்கு, கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், இருவரையும் சமரச மையத்திற்கு தான் அனுப்ப வேண்டும் என கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில், இன்று அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக சங்கீதா தெரிவித்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சங்கீதா தெரிவித்தார். மேலும் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என சங்கீதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com