“நான் முதல்வன் திட்டம், அரசு நூலகம் மூலம்..” - UPSC-ல் சாதித்து, தாய்க்கு பெருமை சேர்த்த மகள்!

செங்கோட்டையை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகளான இன்பா என்பவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
குடிமைப்பணி தேர்வில் வென்ற மாணவி இன்பாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
குடிமைப்பணி தேர்வில் வென்ற மாணவி இன்பாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்புதிய தலைமுறை

செய்தியாளர் - சுந்தர மகேஷ்

இந்த நாட்டின் நிர்வாகத்தை மிகவும் திறம்பட நடத்துவதற்கு மிகவும் அவசியமான நபர்கள் குடிமைப் பணியார்கள். ஒவ்வொரு துறையிலும் இவர்களது பங்களிப்பு என்பது அத்தனை அவசியமானது. இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் குடிமைப் பணிகளுக்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் முயற்சி எடுத்து வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது.

குடிமைப்பணி தேர்வில் வென்ற மாணவி இன்பாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
"கல்வி, மருத்துவம் திராவிட ஆட்சியின் இரு கண்கள்" - முதல்வர் பெருமிதம்

இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணவி இன்பா என்பவர் வெற்றி பெற்று தன் மாவட்டத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார்.

பீடி சுற்றும் தொழிலாளியின் மகளான இவர் செங்கோட்டை நகராட்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.

இன்பா
இன்பா

மாணவி இன்பா-விற்கு சிறுவயதில் இருந்தே யுபிஎஸ்சி தேர்வு குறித்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. அதேசமயம் பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்ததால் இந்த தேர்வை சந்திப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

“தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம், அரசு நூலகம், AICSCC ஆகியவை யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது”
மாணவி இன்பா

இதுகுறித்து நம்மிடையே பேசிய அவர், “எனது படிப்பிற்கு செங்கோட்டை நூலகம் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. வீட்டில் படித்தால் முழு கவனம் செலுத்த முடியாது என்பதால் நூலகத்திலேயே படிப்பதற்கான முழு நேரத்தையும் செலவு செய்தேன்.

பொருளாதாரம் சார்ந்து பல்வேறு பிரச்சனைகள் சந்திப்பது மட்டுமல்லாது, நான் பெண் என்பதால் உறவினர்கள் ‘திருமணம் செய்து கொடுத்து விட வேண்டியதுதானே’ என்றெல்லாம் எனது தாயிடம் கூறி வந்தனர். ஆனால், இதையெல்லாம் தாண்டி எனது தாயின் ஒத்துழைப்புடன் தற்போது இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என் தாய் பீடிசுற்றும் தொழிலாளி.

குடும்ப சூழ்நிலை காரணமாக, சென்னைக்கு சென்று படிக்க முடியாத நிலை எனக்கு இருந்தது. அச்சமயத்தில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் பற்றி அறிந்து அதன்மூலம் ஸ்காலர்ஷிப் பெற்று, அந்த தொகையை வைத்து பயின்றேன். AICSCC மூலம் பல பயிற்சி தேர்வுகள் எழுதி என்னை நானே மேம்படுத்திக்கொண்டேன்.

கிராமப்புற மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வு என்றாலே அச்சப்படுகின்றனர். குரூப் 1, 2 போன்ற தேர்வுகளில் காட்டும் ஆர்வத்தை இதில் காட்டுவதில்லை. தங்களின் பகுதிக்கும், மக்களுக்கும் பணியாற்ற விருப்பமும், கூடுதல் கவனமும் செலுத்தி படித்தால் யுபிஎஸ்சி தேர்வில் அனைவரும் வெற்றி பெறலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

தாயுடன் மாணவி இன்பா
தாயுடன் மாணவி இன்பா

இதுகுறித்து இன்பாவின் தாய் கூறுகையில், ”எனது மகள் தேர்வில் வெற்றி பெற்று எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளார். ‘பெண்ணை ஏன் தூரமா காலேஜுக்கு அனுப்புற, கல்யாணம் செய்து கொடு’ என ஊரார் உறவினர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமலும் கூனி குறுகியும் வாழ்ந்த நிலையில், இந்த வெற்றியின் மூலம் உறவினர்கள் பேச்சை வாயடைக்க செய்துள்ளார் என் மகள். தற்போது, அவர்களே என் மகளை வாழ்த்துவது மகிழ்வளிக்கிறது. இந்த தேர்வில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என தெரியும். ஆனால், அந்த வெற்றி நீண்ட தூரத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், உடனடியாக வெற்றி பெற்று எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்” என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

குடிமைப்பணி தேர்வில் வென்ற மாணவி இன்பாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
MBBS முடித்த எட்டே மாதத்தில் UPSC தேர்வில் சாதனை தேர்ச்சி! தமிழகஅளவில் முதலிடம் பிடித்த மதுரை இளைஞர்

இந்நிலையில், ’என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் நான் முதல்வன் ’ என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இன்பாவுக்கு இன்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கிறார்.

இந்திய ஆட்சிப் பணி தேர்வு என்பது நகர்ப்புற மாணவர்கள் மட்டுமானது இல்லை, கிராமப்புற மாணவர்களும் இந்த தேர்வில் சாதிக்க முடியும். குரூப் 1, குரூப் 2 போன்ற தேர்வுகளில் மட்டுமன்றி இந்திய ஆட்சிப் பணி தேர்விலும் கிராமப்புற மாணவர்களால் வெற்றி பெற முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளார் மாணவி இன்பா.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com