உதயநிதிக்கு அடுத்து நயினாரா? மேடையில் சொன்ன ஒரே வார்த்தை.. வெடித்துச் சிதறிய சர்ச்சை!
தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றதில் இருந்து, அவரைப்பற்றி, பல்வேறு தரப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கல்களில் சிக்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயன், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்கள்.
இதன்காரணமாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவர்கள் மீது கைது நடவடிக்கையையும் எடுத்திருந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து மிகவும் அநாகரிகமான முறையில் பேசி, பரபரப்பை கிளப்பியுள்ளார் நயினார் நாகேந்திரன். அதாவது, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒரே நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”உயிரிழந்த மாட்டின் தோலை வைத்து செருப்பு செய்கிறோம். உயிரிழந்த ஆட்டின் தோலை வைத்து ஆடை செய்கிறோம். ஆனால், உயிரிழந்த மனிதனின் தோலை வைத்து என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி, எனக்கு கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தது. அப்படியானவர்கள் ஆளக்கூடிய இடமாக இது மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியபோது, ” ‘அப்பா எங்கே’ என சட்டமன்றத்தில் தேடுகிறார்கள்” என்று விமர்சித்த நயினார் நாகேந்திரன், அதன்பிறகு பேசிய வார்த்தைதான் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தனது கடும் கண்டனங்களை அவர் தெரிவித்தார். அரசியல் தலைவர்களைப்போல் பேசாமல், தெருமுனை பேச்சாளரைப்போன்று பேசுகிறார். அவர்கள் அநாகரிகமாக என்ன பேசினாலும், நாங்கள் நாகரிக அரசியலைத்தான் செய்வோம் என்றும், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பதிலளித்திருக்கிறார்.
இதற்கு முன்பு, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது பாய்ந்த கைது நடவடிக்கை, இவர் மீதும் பாயுமா அல்லது தவெக அரசின் எதிர்விணை என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகள், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுப்பபட்டு வருகிறது.

