நயினாரிடம் அமித்ஷா சொன்ன விஷயம்.. “அதிமுக கூட்டணி.. டாஸ்மாக் ஊழல்” பாஜக போடும் முக்கிய ஸ்கெட்ச்!
தமிழக பாஜக தலைவரான பிறகு முதல்முறையாக டெல்லி விஜயம் மேற்கொண்டிருக்கும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று பிரதமர் மோடியையும் சந்தித்து பேசியுள்ளார் நயினார்.
தமிழக அரசியலில் பாஜக காட்டும் தீவிரத்தையே அடுத்தடுத்த நகர்வுகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. என்ன நடக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியே ஆக வேண்டும் என்ற புள்ளியில், அதிமுகவும் - பாஜகவும் கூட்டணியை அமைத்திருக்கிறது. இதில், கூட்டணி வைத்து ஆட்சியை பிடிப்பதா.. கூட்டணி ஆட்சியை அமைப்பதா என்பது இரு கட்சிக்குள்ளும் இடியாப்ப சிக்கலாக இருப்பதாக தெரிகிறது.
முன்னதாக இதற்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணிதான் வைக்கிறோம். கூட்டணி ஆட்சி என்று குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று விளக்கினார். ஆனால், இதற்கு பதிலளிக்கும் தமிழக பாஜக தலைமை, கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமையே முடிவெடுக்கும் என்று கூறியது.
இந்த நிலையில்தான், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரன், பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, பல்வேறு முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கிறார். அதன்படி, நேற்று காலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து விரிவாக ஆலோசித்தவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். தொடர்ந்து நள்ளிரவில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் நயினார்.
அரைமணி நேரத்திற்கு நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் பேசுபொருளாகி இருக்கும் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனை கேட்டுக்கொண்ட அமித்ஷா, கூட்டணி ஆட்சி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்.. திமுக அரசின் தோல்விகள், ஊழல்கள் குறித்து மக்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துரைங்கள். போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துங்கள். முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து மக்களிடம் எடுத்துரையுங்கள் என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக முக்கியமாக டாஸ்மாக் ஊழல் குறித்து அமித்ஷா பேசியதாக தெரிகிறது. டெல்லியில் ஆம் ஆத்மியின் டாஸ்மாக் ஊழலை, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்தோ, அந்த வகையில் தமிழகத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக அரசியல் குறித்து விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவரானதற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்தார் என்று தெரிகிறது.