“திமுக வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம்.. ஒன்றுக்கு 100 கொடி கம்பங்கள் நடப்படும்” - அண்ணாமலை சவால்

நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
அண்ணாமலை
அண்ணாமலைpt web
Published on

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் வெளியில் 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடி கம்பம் வைக்கப்பட்டது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இந்த கொடி கம்பத்தை அகற்ற பனையூர் மக்கள் கூறியிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் கொடி கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் சிலர் கிரேன் கண்ணாடியை உடைத்தனர். இதற்கு காரணமான 6 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஐந்து பேரை கைது செய்த நிலையில் மீதம் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பல்வேறு பாஜக தலைவர்கள் இதற்கு தங்களது கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

 பாஜக கொடிக் கம்பம் அகற்றம் - வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்

 VanathiSrinivasan |  BJP |  Annamalai | DMK
பாஜக கொடிக் கம்பம் அகற்றம் - வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம் VanathiSrinivasan | BJP | Annamalai | DMK

இந்நிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாவது, “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழ்நாடு பாஜகவின் சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணாமலை
அண்ணாமலைpt web

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு விவின்பஸ்கரன் அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com