“காந்தியை தூக்கி பிடிப்பவர்கள் நாங்களே.. கோட்சேவை தூக்கி பிடிக்க கூடாது” - கட் அண்ட் ரைட் அண்ணாமலை!

காந்தியை தூக்கி பிடிப்பவர்கள் நாங்களே.. கோட்சேவை தூக்கி பிடிக்க கூடாது.. என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
annamalai, godse
annamalai, godsePT

மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சுதந்திரப் போராட்ட தியாகிகள் எந்த சமூகத்தில் இருந்து வந்தார்கள் என்பதிலிருந்து அவர்களை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களையும் ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள். மகாத்மா காந்தி, பகத்சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி தலைவர்களாக மாற்றி இருப்பார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ராபர்ட் கால்டுவெல்தான் திராவிட கருத்தியலை உருவாக்கியவர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கால்டுவெல்லை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். அவர்தான் திராவிடம் என்று பிரித்துக் கூறினார். இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்றவர்களை தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளை கொண்டாடுவதில்லை” என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு மட்டத்தில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆளுநரின் பேச்சைக் கண்டித்து காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

ஆரியம் திராவிடம் விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால் புராணம் படிக்க வேண்டும். நான் அந்த அளவிற்கு படித்தவன் இல்லை. அதற்கு நான் உட்பட்டவன் அல்ல. ஆரியமா என்ன என்று அறிஞர்களைப் பார்த்து கேட்டால் தான் தெரியும். ஆய்வு செய்தால் தான் தெரியும். ஆய்வு செய்யாமல் நீங்கள் கேட்கும் கேள்விக்கு தவறான பதில் கொடுத்திவிடக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், “1967 க்கு பிறகு தலைவர்களை ஜாதி முத்திரை குத்தி பின்பற்றி வருகின்றனர். ஜாதி கலவரங்களை உருவாக்குவதற்கு திமுக அரசு காரணமாக இருந்துள்ளது. ஒவ்வொரு ஜாதி கட்சியும் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்களை வைத்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்த ஊரில் பேருந்து நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைக்கின்றனர்.

பாரதியார் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை. பாரதியாரை திமுகவினர் பலகாலம் ஏற்று கொள்ளவில்லை, அவரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தனர், பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள். வாரணாசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீடு பெட்டி கடை மாதிரி இருக்கிறது. முதலமைச்சர் பாரதியார் பற்றி டிராமா போடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். காந்தியை அதிகமாக தூக்கி பிடிப்பவர்கள் நாங்கள் தான். காந்தி விஷயத்தில் கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்கவில்லை. கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்க கூடாது” எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com