\
TN Assembly Surpasses Previous Years Numbers increase
CM VijayPT

வெறும் 28 நாட்கள்தான்.. முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையை உடைத்த தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காண பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Published on

செய்தியாளர் - M. மீரா

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டப்பேரவையில் இன்று (செப். 8) பொதுத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்தத் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அப்போது பேசிய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி உள்ளதா என்பது குறித்து முன்பு குழப்பம் நிலவி வந்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரில் காணவும், அங்கு நடைபெறும் விவாதங்கள் மற்றும் நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தருவதாக அவர் தெரிவித்தார்.

பார்வையாளர்களின் வருகை தொடர்பான புள்ளிவிவரங்களையும் அவர் வெளியிட்டார். அதன்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரை காண 22,651 பேர் வருகை தந்துள்ளனர். 2022-ஆம் ஆண்டு 22,150 பேரும், 2024-ஆம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் பேரும் சட்டப்பேரவையைப் பார்வையிட்டுள்ளனர். அதேசமயம், 2025-ஆம் ஆண்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து 20,103 பேராக பதிவாகியுள்ளது.

PT Digital

இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும் 28 நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மட்டும் 32,555 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வருகை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். வழக்கமாக சுமார் 20 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே சட்டப்பேரவையை பார்வையிட வருவார்கள். ஆனால், இந்த முறை 75 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே சட்டமன்றம், அரசியல் மற்றும் பொதுவாழ்வு குறித்த ஆர்வம் அதிகரித்து வருவதையே இந்த வருகை எண்ணிக்கை காட்டுவதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com