திருத்தணி முருகன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா - சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்
செய்தியாளர்: B.R.நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், வைகாசி விசாகம் முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மலை கோயில் மாடவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விசாகம் பெருவிழாவை யொட்டி காலை 8 மணி அளவில் சண்முகருக்கு விபூதி, பால் ,பன்னீர், தயிர், கதம்பம், இளநீர், பழ வகைகள் மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகம் பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.