ஆவடியில் திடீரென கனமழை... அதிவேக காற்றில் சரிந்து விழுந்த நிழற்குடை..!
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், ஆவடி போக்குவரத்து போலீசார் சார்பில் ஆவடி, பருத்திப்பட்டு, திருமுல்லைவாயல் போன்ற முக்கிய சந்திப்புகளில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சிக்னல் போடும் சமயத்தில் கொளுத்தும் வெயிலில் சற்று நிழல் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் நெடுதூரம் பயணித்து வரும் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பொழிந்த கனமழை காரணமாக பருத்திப்பட்டு பகுதியில் அமைத்திருந்த நிழல் பந்தல் காற்றில் சரிந்தது.. தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தின் ஓட்டுநர் நிழற்பந்தல் சரிந்ததைக் கண்டதும் மாற்றுப் பாதையில் செல்ல முயன்றுள்ளார். ஆனாலும், நிழற்பந்தல் பேருந்தின்மீது சரிந்தது. அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நல்வாய்ப்பாக தப்பித்தனர்.
சாலையிலேயே நிழற்பந்தல் சரிந்ததால் ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. இதனிடையே சரிந்து விழுந்த நிழற்பந்தலை நீண்ட நேரம் ஆகியும் அகற்ற முடியாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. அதோடு, மேலும் விபத்து ஏற்படுவதற்கான சூழலும் இருந்தது. இது தொடர்பாக ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுவதாகவும் கிரேன் வருவதற்காக காத்திருப்பதாக தெரிவித்தார்..