திருப்பூரில் செய்தியாளர் தாக்கப்பட்ட நிகழ்வு - முதல்வர் கண்டனம்; ரூ.3 லட்சம் நிதியுதவி

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட நிகழ்விற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர், நேசபிரபு
முதலமைச்சர், நேசபிரபுpt web

திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலாளர் அறையில் இருந்த அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தாக்கினர். பிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றது.

இதில் படுகாயம் அடைந்த பிரபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே தன்னை சிலர் பின் தொடர்ந்து வருவதாக காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு செய்தியாளர் புகார் அளித்து வந்துள்ளார்.

ஆனால், காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே தாக்குதல் நிகழும் சற்று முன் கூட காவல்துறையினரிடம் செய்தியாளர் பாதுகாப்பு கோரும் செல்போன் பேச்சும் வெளியானது.

அதில் அவர் “வந்துட்டே இருக்கானுங்க சார்... எவ்ளோ தடவைதான் பாக்றது? பல்லடம் போலீஸ்கிட்டே சொல்லி பிடிக்க சொல்லுங்க சார். எல்லா கேமராலயும் அவங்க முகம் பதிஞ்சிருக்கும். இந்த பெட்ரோல் பங்க் கேமரால கூட இருக்கும். எதுவேணா நடக்கலாம் சார்...” என்று கூறுகிறார்.

காவலர் பேசிக்கொண்டிருந்த சில விநாடிகளில், செய்தியாளர் நேசபிரபு, “சார் வந்துட்டானுங்க சார்... 5 கார் வந்திருக்கு சார்... அச்சோ சார்... என் லைஃப் முடிஞ்சுச்சு... அவ்ளோதான்” என அலறுகிறார். இந்த ஆடியோ, கேட்போரையும் அதிர்ச்சியடைய செய்யும் வகையில் உள்ளது. இதையடுத்து அரசு தரப்பில் உரிய உடனடி நடவடிக்கை தேவையென்ற குரல் வலுவடைந்தது.

இந்நிலையில், பல்லடத்தில் தாக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பத்திரிகையாளர் நல வாரியத்தில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், "தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் திரு. நேசபிரபு காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com