ரிதன்யாவின் அப்பா வைத்த கோரிக்கை.. அரைமணி நேரத்தில் அதிரடி திருப்பம்! என்ன நடக்கிறது?
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் திருமணமான 78 நாட்களில் இளம் பெண் ரிதன்யா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கணவன் குடும்பத்தாருக்கு தூக்க தண்டனை விதிக்க வேண்டும் என்று ரிதன்யாவின் தந்தை கோரிக்கை வைத்தார். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த அரை மணி நேரத்தில் வழக்கில் அடுத்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ரிதன்யா வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து மாமியார் சித்ராதேவியை கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை மனு அளித்தார் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை. முதற்கட்டமாக ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டாலும், மாமியார் சித்ராதேவி உடல் நல குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து, வீட்டில் இருந்து ரிதன்யாவின் கணவன் மற்றும் மாமனாருக்கு சாப்பாடு செல்வதாகவும், முக்கிய நபரான மாமியார் வெளியே இருக்கக்கூடாது.. கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் ரிதன்யாவின் பெற்றோர் கோரிக்கை வைத்து வந்தனர். அதோடு அப்பகுதி மக்களிடையேயும் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இதுதொடர்பாக மனு அளித்த அண்ணாதுரை, ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியை கைது செய்ய வேண்டும்.. மருமகன் கவின்குமார் பேசிய செல்போன் பதிவுகளை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும்.. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், மாமியார் சித்ராதேவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சித்ராதேவி தற்போது சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தனது மகளின் மரணத்திற்குப் பிறகு சித்ராதேவியை கைது செய்யும்வரை தான் உணவு உண்ண மாட்டேன் என்று ரிதன்யாவின் தாய் கோரிக்கை வைத்த நிலையில், கைது செய்யப்பட்டிருப்பது முக்கிய திருப்பமாக உள்ளது.