திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ வெட்டி கொலை... ரூ.1 கோடி நிதியுதவி!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. தென்னை மரங்கள் அதிகமுள்ள இந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் மூர்த்தி என்பவரின் குடும்பம் அங்கேயே தங்கியிருந்துள்ளது.
இங்கு அவரது மகன்கள் தங்கப்பாண்டி மற்றும் இன்னொரு மகன் மூவருக்கும் இடையே நேற்று இரவு கடுமையாக சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட அருகில் இருந்த தோட்டத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜா இருவரும் சண்டை போட்டுக் கொண்ட மூவரையும் விளக்கம் முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுவை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
காவலர் அழகுராஜா சிறப்பு ஆய்வாளரை வெட்டுவதைப் பார்த்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், மேற்கு மண்டல டிஐஜி சசிமோகன், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் யாதவ கிரீஸ் அசோக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் .
தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட சிறப்பு ஆய்வாளர் சண்முகவேலு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் 5 தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஹண்டர் மற்றும் டெவில் இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தோட்டத்தில் நடந்த இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1 கோடி நிதியுதவி!
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவு; சண்முகவேல் உயிரிழப்பு, காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.