திருப்பூர் | ரயில் முன் பாய்ந்து குழந்தையுடன் பெண் எடுத்த விபரீத முடிவு
செய்தியாளர்: ஹாலித் ராஜா
திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குழந்தை மற்றும் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி (26) அவருடைய மகன் யாதேஸ்வரன் (4) என்பதும் தெரியவந்தது. விஜயலட்சுமிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையில், குடும்பப் பிரச்னையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண், குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.