திருப்பத்தூர் | வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழப்பு – ஆம்பூரில் சோகம்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சரிதா. இளங்கோவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சரிதா தனது குழந்தைகளுடன் வசித்து வந்த ஓட்டு வீடு பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த சரிதாவின் கடைசி மகன் வெற்றிமாறன் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, அவர்களது வீட்டில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த சுவர் எதிர்பாராதவிதமாக திடீரென இடிந்து விழுந்துள்ளது இடிபாடுகளில் சிக்கிய வெற்றிமாறன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சிறுவன் வெற்றிமாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.