திருமலா மேலாளர் மரணம் | அடுத்தடுத்து எழும் சந்தேகங்கள்.. கொலையா? தற்கொலையா? தீவிரமாகும் விசாரணை!
திருமலா நிறுவன மேலாளர் தற்கொலை தொடர்பாக மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். காவல்துறை அறிக்கையில் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு புகார் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி, 3 ஆண்டுகளாக சென்னை - ரெட்டேரியில் உள்ள, பிரபலமான, திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராக இருந்துள்ளார். இவர், 45 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது, நிறுவனத் தணிக்கையில் அம்பலமானது. இதையடுத்து, 5 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்த நவீன், மீதத்தை விரைவில் தருவதாகக் கூறியுள்ளார். எனினும் நிறுவன அதிகாரிகள், கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமலேயே கொளத்தூர் துணை ஆணையர் நவீனிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நவீன் பணத்தை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டதாகவும் இதனால் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு காவல்துறையினர் அவரை அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் தொடர்ச்சியாக திருமலா பால் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நவீனை மிரட்டவே இதனால் அவமானத்திற்கு ஆளாக நேரிடும் என மன உளைச்சலில் இருந்த நவீன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது அக்கா மற்றும் திருமலா பால் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்து விட்டு ஜூலை 9ம் தேதியன்று நவீன் சொந்தமாக வாங்கியுள்ள அவரது இடத்தில் உள்ள குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மின்னஞ்சலை கண்டு அதிர்ச்சி அடைந்த நவீனின் சகோதரி மாதவரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். மேலும் நவீனின் வீட்டிலும் அலுவலகத்திலும் சென்று தேடியபோதும் இல்லாத நிலையில் அவர் வாங்கிய மனையில் வந்து பார்த்தபோது குடிசையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் நவீனை காவல்துறைனர் மீட்கும்போது அவரது கைகள் கட்டப்பட்டு இருந்ததாகவும் குடிசைக்குள் நாற்காலி எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஒருவேலை நவீன் கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்னும் சந்தேகங்கள் எழுந்து வருகின்றது.
தொடர்ச்சியாக துணை காவல் ஆணையர் எதற்கு புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டும் ? இதில் அவருக்கு என்ன ஆதயம் இருந்திருக்கும் ? கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நிறுவனத்தை சேர்ந்த தீரஜ் பங்கு கேட்டதாக அவர் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த நிலையில்.. உண்மையில் அவர்தான் அந்த மின்னஞ்சலை அனுப்பினாரா ? என இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனை சென்னை காவல்துறை தலைமையிடத்தில் அறிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படிருந்த நிலையில் நேற்றையதினம் காவல்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு புகார் அனுப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனைத் தொடர்ந்து மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.