திருச்செந்தூர் | தூய்மைப் பணியாளர்கள் வராததால் பள்ளி வளாகத்தை கூட்டிப் பெருக்கிய ஆசிரியர்கள்
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தினந்தோறும் பள்ளி வளாகத்தை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தான் பெருக்கி சுத்தப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் தூய்மை செய்ய வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டபோது பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் வராததால், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டபோது...
திருச்செந்தூர் நகராட்சி அலுவலக கட்டடம் புதிதாக திறக்கப்பட்டுள்ளதால் ஆவணங்களை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதனால் தூய்மைப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்செந்தூர் வருகை தர உள்ளார். அதற்காக தூய்மை பணிகளும் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே இன்று நகராட்சி பள்ளிக்கு தூய்மை பணியாளர்கள் செல்லவில்லை என்று கூறினர். நாளை முதல் தொடர்ந்து தூய்மை பணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.