திருச்செந்தூர் | 'முருகனை தரிசிக்க ஒருத்தருக்கு 11,000 ரூபாயா’ கோவில் ஊழியரிடம் பக்தர் வாக்குவாதம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலில் நூறு ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் என மூன்று வரிசைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், கேரளாவில் இருந்து தரிசனம் செய்ய வந்த ஒரு குடும்பத்திடம் கோவில் பணியாளர் ஒருவர் சண்முக விலாஸ் மண்டபம் வழியாக தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு பக்தருக்கு தலா 11 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கு 44,000 ரூபாய் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த கோவில் பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நாள்தோறும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இந்த நிலையில் கேரள தம்பதியினரிடம் தரிசனம் செய்வதற்காக தலா 11,000 ரூபாய் விதம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக இருக்கிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, இச்சம்பவத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.