
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இசைத்திரன் (17), அன்பரசன் (20), லிங்கேஸ்வரன் (22) ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மேலசெல்வனூர் ஊரில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்று கொண்டிருந்தனர். அப்போது சாத்தங்குடி விலக்கு அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பலத்த வேகத்தில் ஆம்னி வேன் மீது மோதியது.
இந்நிலையில், மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில், இசைத்திரன், அன்பரசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லிங்கேஸ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த ஆம்னி வாகனத்தில் வந்த பாலமுருகன் என்பவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கடலாடி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.