தூத்துக்குடி: சுத்தம் செய்ய கிணற்றுக்குள் இறங்கிய இருவருக்கு நேர்ந்த பரிதாபம் - விஷவாயு தாக்கியதா?
செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி, தாளமுத்து நகர் அருகே உள்ள ஆனந்த நகர், பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி மகன் கணேசன் (56). இவரது வீட்டில் 25 அடி ஆழமுள்ள பழைய கிணறு ஒன்று வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.. இந்நிலையில், இந்த கிணற்றை கணேசன் மற்றும் அவரது உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரன், ஜேசுராஜன் மற்றும் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து ஆகிய நால்வரும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, கிணற்றை சுத்தம் செய்ய முதலில் கணேசன் இறங்கியுள்ளார். ஆனால், அவர் வெகு நேரமாகியும் மேலே வராததை தொடர்ந்து மாரிமுத்து இறங்கியுள்ளார்... அவரும் மேலே வராததை அடுத்து அதிர்ச்சியடைந்த பவித்ரன், ஜேசுராஜன் ஆகியோர் இறங்கியுள்ளனர். அப்போது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் கத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான வீரர்கள் ஆக்சிஜன் உதவியுடன் கடும் சிரமத்திற்கிடையே கிணற்றில் இருந்த கணேசன், மாரிமுத்து, பவித்ரன், ஜேசுராஜன் ஆகியோரை மீட்டனர்.
இதில், மயக்க நிலையில் இருந்த பவித்ரன், ஜேசுராஜன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோரை சடலமாக மீட்ட வீரர்கள், இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா விசாரணை மேற்கொண்டார். கிணற்றின் அருகே, வீட்டில் உள்ள கழிவு நீரும் தேங்கியிருப்பதால் விஷவாயு எதும் தாக்கி இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.